×

இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது! : அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டம்!!

திருச்சி:தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருச்சியில் பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் யானை அகிலா பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். இதுவரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. `இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

கோயில் நிலங்களை மீட்க தமிழக முதல்வர் புதிய சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளார். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றி புகார் கொடுக்கலாம். அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். அறங்காவலர் குழு பதவி காலம் 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளாக மாற்றி உள்ளோம்.
கோயில் இடங்களை பொறுத்தளவில் மன்னர் காலத்தில் மன்னர்கள், தொழிலதிபர்கள், ஜமீன்தார்கள் இனாமாக கொடுத்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பது  நடைமுறையில் சாத்தியமில்லை என்றார்.இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : Sehgar Babu , அமைச்சர் சேகர் பாபு
× RELATED அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள...